×

இயற்கை வண்ணங்கள் இருக்க ஏன் செயற்கை டையிங்!

இப்படிக் கேட்பதோடு அதில் ஏராளமான ஆராய்ச்சிகளும் செய்து வருகிறார் காஸ்டியூம் டிசைனர் ஏகன் (எ) ஏகாம்பரம். உலகம் முழுக்க நோ பிளாஸ்டிக், நோ பாலீஸ்டர் என சொல்லிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் ஆஃபர் விலை, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என முடிந்தவரை பாலீஸ்டர் மற்றும் தரம் குறைந்த உடைகளை நம் தலையில் கட்டிக்கொண்டிருக்கிறது வியாபார உலகம். பொதுவாகவே விலை குறைந்த ஆஃபர்களுக்கு மயங்காதீர்கள் என பல காலமாகவே ஃபேஷன் ஆர்வலர்களும், சூழல் ஆர்வலர்களும் சொல்லிக்கொண்டுதான் உள்ளனர். ஆனாலும் மிடில் கிளாஷ் வாழ்க்கை, வருமானம் அதில் கொஞ்சம் விதவிதமாக உடுத்த வேண்டும் என்கிற எண்ணம் என மார்கெட் நம்மை மயக்கிவிடுகிறது. விளைவு சூழல் கேடு, அதைக் கூட விடுங்கள் நம் உடலுக்கேக் கேடு என்பதுதான் இன்னும் சோகம். இதில் மெட்டீரியல்கள் மட்டுமல்லாமல் அதில் பயன்படுத்தப்படும் செயற்கை டையிங் கெமிக்கல்களும் கூட சூழலுக்கு பேராபத்து என்கிறார் ஏகாம்பரம். ‘சொந்த ஊர் திருத்தணி பக்கத்துல அம்மையார்குப்பம் கிராமம். பிறந்தது, வளர்ந்தது எல்லாமே நெசவும், நெசவு சார்ந்த சுற்றுப்புறத்திலும்தான். அதனாலேயே கைத்தறி ஆடை வடிவமைப்பு மேல் அவ்வளவு ஈர்ப்பு. அதையே படிப்பாகவும் எடுத்து அதிலேயே ஆராய்ச்சியும் செய்தேன். தமிழ்நாடு மியூசிக் – ஃபைன் ஆர்ட்ஸ் யுனிவர்சிட்டியிலே டெக்ஸ்டைல் டிசைன் மற்றும் ஆய்வில் எம்.பில் முடித்தேன். சாதாரண கோயில்கள்ல இருந்து குடைவரைக் கோயில்கள் வரை உள்ள சிற்பங்கள், சிலைகள்னு எல்லா டிசைன்களையும் நுணுக்கமா ஃபேப்ரிக்கில் கொண்டு வருவதுதான் என் குறிக்கோள். இதற்கிடையிலே சினிமா காஸ்டியூம் டிசைனிங் மேல் எனக்கு இன்னொரு கண்! ‘காஷ்மோரா’ படம் மூலம் அறிமுகமாகி பல படங்களில் வேலை செய்துகொண்டிருக்கிறேன்.‘ராட்சசி, ‘என்.ஜி.கே’, ‘சர்ப்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ என சினிமா பயணம் தொடர்ந்தாலும் அங்கேயும் முடிந்தவரை இயற்கையான டையிங் மெட்டீரியல்களையே பயன்படுத்துகிறேன்’ என்னும் ஏகாம்பரம் தன் இயற்கை வண்ணங்கள் குறித்து விவரமாக பேசினார்.  ‘உலக அளவில் சுற்றுச்சூழலுக்கு மாசு, உலக வெப்பமயமாதல், இவைகளின் காரணிகளை வரிசைப்படுத்தினால் அதிலே மூன்றாம் இடம் ஃபேஷன் தொழிலுக்குதான். அந்த அளவிற்கு ஃபேஷன் கழிவுகள் உலக ஆரோக்கியத்திற்கு தீங்காகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மாற்றாகதான் சஸ்டெயினபிள் துணிகள், ஆர்கானிக் மெட்டீரியல்கள் என துவங்கி இன்று இயற்கையான டையிங் முறைகளையும் தேடிக் கொண்டிருக்கிறேன். நாம் தினம் தினம் பயன்படுத்தும் மஞ்சள், அரக்கு துவங்கி எத்தனையோ மூலப்பொருட்களில் இருந்து வண்ணங்களைப் பிரிக்கலாம். இயற்கையான வண்ணங்கள் நீர்நிலைகள், நிலம் என எதனையும் கெடுக்காது. மேலும் சில இயற்கை வண்ணங்கள் சூழலுக்கு நன்மையும் கூட செய்யும். ஆனால் செயற்கை டையிங்கில் கெமிக்கல் மற்றும் நச்சுத் தன்மை அதிகம்’ எனில் எந்தெந்தப் மூலப் பொருட்களில் வண்ணங்களைப் பிரிக்கலாம் மேலும் தொடர்ந்தார் ஏகாம்பரம். ‘திரும்பத் திரும்ப இயற்கை வண்ணங்களை இவ்வளவு முக்கியமாகச் சொல்லக் காரணம் நம் ஊரில் , நம் வாழும் இடத்தில் கிடைக்கும் மூலிகைகள், மூலப் பொருட் களைப் பயன்படுத்தும் போது அவைகள் நமக்கு பாதுகாப்பாக மாறும். அதையே கெமிக்கல், நச்சுத் தன்மை கொண்ட டையிங் வண்ணங்களால் முதல் பிரச்னை உடல் சூடு. உடல் சூடானாலே அதன் மூலமாக வரக்கூடிய பிரச்னைகள் என்னவென்று யாவரும் அறிந்ததே. அதே சமயம் ஒரு காட்டன் உடையிலே மஞ்சள், அரக்கு, அல்லது பூக்கள் மூலமாகக் கிடைக்கும் வண்ணங்களைப் பயன்படுத்தும்போது இயற்கையாகவே உடல் குளிர்ச்சியாகும். நம் இந்தியா மாதிரி வெப்ப நாடுகளுக்கும் அதுதான் சரியானது. அந்தக் கால நெசவு முறைகளும் அதுதான். அதனால்தான் இன்று ஹேண்ட்லூம் புடவைகள், கைத்தறி ஆடைகள் எல்லாம் விலை அதிகமாக இருக்கின்றன. அதிக விலைக்குக் காரணமும் இந்த நன்மை செய்யும் காரணிகள் அதில் இருப்பதனாலேயேதான். மரமஞ்சள், விரலி மஞ்சள், சுருளிப்பட்டை, கடுக்காய், மஞ்சிஸ்டா, மாதுளைத் தோல், வெங்காயத் தோல், ஆரஞ்சு தோல், இப்படி எத்தனையோ வகைகளில் இயற்கை வண்ணங்கள் கிடைக்கும். வண்ணங்களில் மிகச் சிறப்பான வண்ணம் நீலம், அல்லது இண்டிகோ. அதன் உண்மையான பெயர் அவுரி நீலி. நீலி என்கிற வண்ணம்தான் நீலமா மாறியிருக்கு. அவுரி நீலி இந்த பூக்கள் நீல நிறத்திலே இருக்கும் இதிலிருந்துக் கிடைக்கக் கூடிய இயற்கை நீலம் அவ்வளவு அற்புதமா இருக்கும். மேலும் அவுரி நீலி நிறைய மருத்துவ குணங்கள் கொண்ட தாவரம். பண்டையக் கால சாயத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட தாவரம் அவுரி நீலி. இதனை வைத்தே நீல நிறத்தில் இருக்கும் கடவுள்களை நீலகண்டன், நீலி, நீலி விநாயகர் இப்படியெல்லாம் சொல்வதுண்டு. இந்த நீலிதான் இன்று நீலமாக நிற்கிறது’ சரி இயற்கையான மெட்டீரியல்கள், வண்ணங்கள் பயன்படுத்தும் நோக்கம் எல்லாருக்கும் உண்டு.ஆனால் அதன் விலை நடுத்தர மக்களால் சமாளிக்க முடியாத நிலையில் இருக்கும்போது எப்படி ஆர்கானிக் ஃபேஷன்களுக்கு மக்கள் திரும்புவர்.‘ஒரு காலத்தில் இந்தியா மாதிரியான நாடுகளில் அவைகளின் பயன்கள், முக்கியத்துவங்கள் தெரியாமலேயே காட்டன், லினென், மல்மல் இப்படியான இயற்கையான கைத்தறி உடைகள் மட்டும்தான் உடுத்தினோம். அப்போது விலையும் குறைவாகத்தான் இருந்தன. எப்போது விலை குறைந்த கெமிக்கல் மெட்டீரியல்கள், செயற்கை மெட்டீரியல்கள் எல்லாம் வரத் துவங்க ஆரம்பித்ததோ அப்போதே கைத்தறி உடைகளை ஒதுக்கத் துவங்கினோம். அந்தத் தொழில் நலிவுறத் துவங்கியது. இதற்கிடையில் மீண்டும் மக்களுக்கு ஆர்கானிக் உடைகள் கைத்தறி உடைகள் மேல் பார்வை விழும் போது நிலை கைமீறிவிட்டது. போதிய நெசவாளர்கள் இல்லை. இப்போது கைத்தறி உடைகளின் முக்கியத்துவம் தெரியும்,அதன் பயன்கள் புரியும். ஆனால் போதுமான உற்பத்தியும் இல்லை, நெசவாளர்களும் இல்லை. வேண்டுமாயின் அதற்குரிய விலையைக் கொடுத்து வாங்குங்கள் என மார்கெட்டும் மாறிவிட்டது. போனபிறகுதான் அருமை புரியும் என்பதுதான் இது. மீண்டும் பழைய நிலைக்கு மக்கள் மாறும்போது உற்பத்தியும் அதிகரிக்கும். அதற்குரிய பணியாளர்களின் எண்ணிக்கையும் பெருகும். அன்றே ஃபேஷன் உலகின் நண்பனாக இருந்தவர்கள் இந்திய நெசவாளர்களும், அவர்களின் கைத்தறி உடைகளும். ஆனால் இன்று அத்தனையும் இழந்து விலை குறைந்த தரம் குறைந்த உடலுக்கு தீங்கான வண்ணங்கள்,  துணிகள் என உடுத்திக் கொண்டிருக்கிறோம். காட்டன் துணி எனில் அது ஏதேதோ வகைகளில் மறுசுழற்றியாகும். அட நம் வீட்டு சமையலறையில் கரித்துணியாக, கால்மிதியாகவாவது பயன்படுத்தினோம். ஆனால் இன்று நாம் வாங்கும் ஆடைகள் குப்பையில் விழுந்து நிலம், நீர் வளங்களைத்தான் அழிக்கின்றன. இயற்கையுடன் நண்பனாக நாம் வாழ்ந்தாலே இயற்கை நம்மைப் பாதுகாக்கும்’ அழுத்தமாகச் சொல்கிறார் ஏகன் (எ) ஏகாம்பம்.தொகுப்பு : ஷாலினி நியூட்டன்

The post இயற்கை வண்ணங்கள் இருக்க ஏன் செயற்கை டையிங்! appeared first on Dinakaran.

Tags : Egan (A) Ekambaram ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...